
அதில் விஜய் சேதுபதி பேசியதாவது, " `வெண்ணிலா கபடிக்குழு' சமயத்தில் இருந்தே லெனின எனக்குத் தெரியும். `பண்ணையாரும் பத்மினியும்' பட சமயத்தில் இந்தக் கதைய பத்தி என்கிட்ட சொன்னார். அப்போ என் சம்பளம் 25 லட்சம். என்கிட்ட பணம் இல்ல சார் இப்போதான் லைஃப ஆரம்பிச்சிருக்கேன். யாராவது தயாரிப்பாளர் வந்தா சொல்றேன், இல்லனா நானே சம்பாதிச்சு எடுக்குறேன். நடுவுல உங்களுக்கு வேற யாராவது தயாரிப்பாளர் கிடைச்சா கூட போயிடுங்க பிரச்சனை இல்லனு சொன்னேன். ஒரு வருஷம் கழிச்சும் கூட அதையேதான் சொன்னேன். ஆனா, கடைசியில் நான்தான் அந்தப் படத்தை தயாரிக்கணும்னு அமைஞ்சது.
படம் முடிஞ்சு ரெடியானதுக்குப் பிறகு நானும் பார்த்தேன். உண்மைய சொல்லணும்னா எனக்குப் படம் திருப்திகரமானதா தெரியல. ஏன்னா எனக்கு சினிமா தெரியும், அறிவிருக்குனு நினைச்சிருந்தேன். எனக்கு லெனின் மேல நம்பிக்கை பெருசா இருந்தது, ஒருவேளை நான் எதிர்பார்த்தது வேறயானு ஒரு குழப்பமும் இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு படம் இப்போ வெளியாகியிருக்கு. நல்ல படம் எடுத்திருக்கான் விஜய் சேதுபதின்னு யாராவது பாராட்டினா அது எனக்கானது இல்ல, எனக்கு அது வேண்டவும் வேண்டாம். ஏன்னா இந்தப் படத்தை தொடங்கினதில் இருந்து, அதன் மேல நம்பிக்கை வெச்சு சுமந்துகிட்டிருந்தது லெனின் பாரதி மட்டும்தான். இப்போ நான் எடுத்த படம், நல்ல படம்னு நீங்க பேசிதான் எனக்குப் புரியுது. என் படங்களுக்கான விமர்சனங்கள் வரும்போது நிறைய பேர் மேல் கருத்து வேறுபாடும் கோபமும் வந்திருக்கு. இன்னைக்கு எனக்கு திருப்தி இல்லாத ஒரு படத்தை நீங்க எல்லாம் பாராட்டும் போதுதான், நீங்க எந்த கோணத்தில் ஒரு படத்தை பார்க்கறீங்கன்னு புரியுது, என்னுடைய பார்வைய மாற்றுது. கலைய யாராலும் சுலபமா ஜட்ஜ் பண்ண முடியாதுன்னு இப்போ புரியிது. எனக்குப் பாடம் புகட்டின அத்தனை பேருக்கும் என் நன்றி" எனப் பேசினார் விஜய் சேதுபதி.