Followers

Monday, August 27, 2018

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review

பாட்டு, டான்ஸ் எல்லாம் ஓகே. ஆனால்...? - `லக்ஷ்மி' விமர்சனம் - Lakshmi movie review
நடனத்தின் மீது வெறி கொண்ட சிறுமி தனது கனவை நிறைவேற்றினாளா என சொல்கிறது `லக்ஷ்மி'

லக்ஷ்மி (தித்யா) அலாரம் டோன் கேட்டால் கூட துள்ளி குதித்து ஆடிவிடும் அளவுக்கு நடனத்தின் மீது வெறி கொண்ட பள்ளி மாணவி. ஆனால் அவளது அம்மா நந்தினிக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடனத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு. மகளை நடனத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுக்கி வைக்கிறாள். அவளது நடனத் திறமையைப் பார்த்து வியப்பாகும் கிருஷ்ணா (பிரபுதேவா), indian pride நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அவளுக்கு எப்படியாவது உதவ நினைக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் டான்ஸ் அகாடமியில் சேரவும், திறமையை வளர்க்கவும் உதவுகிறார் பிரபுதேவா. நடனம் என்றாலே வெறுப்பாகும் அம்மாவை சமாளித்து தன் திறமையை உலகத்துக்குக் லக்ஷ்மி எப்படிக் காண்பிக்கிறாள் என்பதே படத்தின் கதை. கூடவே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடனத்தின் மேல் ஏன் அத்தனை வெறுப்பு, பிரபுதேவா யார்? போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லி படம் முடிகிறது.

வழக்கம் போல் விஜய் தன் ட்ரேட் மார்க் ஃபீலை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார். நடனத்தில் ஆர்வம் உள்ள சிறுமியின் கதையை முடிந்த அளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

பிரபுதேவா, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை 'மெர்குரி'யில் ஒருமுறை நிரூபித்துவிட்டார். எனவே அவருக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் சாதாரணமாக செய்ய முடியும் ஒன்றாகவே படுகிறது. ஆனாலும், கலங்கிப் போய் நிற்கும் காட்சிகளின் மூலம் தன் பங்கை சரியான முறையில் செய்து முடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் தன் இருப்பை முடிந்த வரை நன்றாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தாலும், நடனத்தில் மட்டும் திறமையைக் காட்டியிருகிறார் தித்யா, நடிப்பில் இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை. தன்னைவிட சிறப்பாக நடனமாடும் ஒருவரைப் பார்த்து வியப்படைவதும், வாய்ப்பு மறுக்கப்படும் போது வெறுத்துப் போவதுமாக உணர்வுகளை கடத்தி நடித்திருந்த அர்ஜுன், சின்னச் சின்னக் குறும்புகள் செய்து கவனிக்க வைக்கும் அர்னால்ட் ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக படத்தில் நடனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரின் நடனமும் வியப்பைத் தர தவறவில்லை.

ஆனால், அழுத்தமற்ற கதையாக்கம் படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம். எனவே, விஜயின் ஃபிலிமோகிராஃபியில் இன்னொரு படம் என்கிறபடியே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நடனம் பற்றிய படம் என்பதால் படத்தில் அதிரடியான நடனக் காட்சிகளும், வெற்றியடையும் தருணமும் மட்டும் சிறப்பானதாக இருந்துவிட்டால் போதும் என நினைத்தது போல தெரிகிறது. காரணம் பல உள்ளது. படத்தின் மையம் லக்ஷ்மி கதாபாத்திரம். அவளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஆர்வம் என்பது மட்டுமே காட்டப்படுகிறதே தவிர, எதனால் அவளுக்கு ஆர்வம், ஏன் அவளுக்கு அந்த வெற்றி தேவை என்கிற எந்த விஷயமும் இல்லை. அதனாலேயே எப்படியும் இவள் ஜெயித்துவிடுவாள் என்கிற மிதப்பு வந்துவிடுகிறது. எனவே, அவளுக்கு வரும் தடைகள் நமக்கு எந்த பதற்றத்தையும் உண்டாக்காமல் சென்றுவிடுகிறது. கோவை சரளாவின் கதாபாத்திரம் ஏன் இதை எல்லாம் செய்கிறாது என்பதற்கு சொல்லப்படும் காரணம் காமெடியாக டீல் செய்யப்படுவது, படத்தின் தீவிரத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கவே செய்கிறது. தவிர காமெடி என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் இப்படி பித்தலாட்ட வேலைகளை செய்கிறார் என்பதற்கு காரணம் இவ்வளவு சில்லியானதா?
பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கு இடையேயான உறவும் மேலோட்டமாகவே சொல்லப்படுகிறது. கதாசிரியர்கள் விஜய் - நீரவ் ஷா இன்னுமும் தெளிவாக கதையை சொல்லியிருக்க வேண்டுமோ என்கிற எண்ணமும் எழுந்தது.

பரேஷ் ஷிரோத்கர், ரூல் தவ்சன், ஷம்பா நடன அசைவுகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக சாம் சி.எஸ் அமைத்திருந்த பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வேண்டியது. கூடவே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ராஜேஷும் ஒரு கலர்ஃபுல்லான நடனத் திருவிழாவையே கண் முன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக டான்ஸ் ரிகர்சலில், ஃப்ளாஷ் பேக்கில் வரும் பிரபுதேவாவின் நடனம், கவிதை ஒன்றை ஒலிக்கவிட்டு பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தைகளும் ஆடும் நடனம் இரண்டும் ரசிகர்களுக்கான அசத்தல் விருந்து. மேலும் பிரபுதேவா மற்றும் எதிரணியின் கோச் இருவருக்குமான உரசலில் இருந்த தீவிரத்தன்மை சுவாரஸ்யமானதாய் இருந்தது. ஆனால், மிகவும் எளிதாக யூகிக்கக் கூடிய அடுத்தடுத்த காட்சிகள் சோர்வாக்குகிறது.

நெகிழ வைக்க வேண்டும் என்பதற்காக காட்டப்படும் சில காட்சிகள் படத்தின் நாடகத்தன்மையை அதிகரிக்கிறது. நடனம் சம்பந்தமாக எல்லாமும் இருந்தது போல், ஒரு அழுத்தமான கதையும் இருந்திருந்தால் `லக்ஷ்மி'யின் ஆட்டம் அதிர வைத்திருக்கும். கலர்ஃபுல் நடனம், பிரபுதேவா, கிளைமாக்ஸில் வரும் வின்னிங் மொமன்டம் மட்டும் ஒரு டான்ஸ் சினிமாவிற்கு போதும் என நினைப்பவர்களுக்கு லக்ஷ்மி எந்த ஏமாற்றத்தையும் தராது.

No comments:

Post a Comment